#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday 3 September 2016

சி.மணி

மிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம்,செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல்.யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி. இத்தனைக்கும் மேற்கத்திய நவீன கவிதையின் பாதிப்பு அவரிடம் அதிகம்.
டி.எஸ்.இலியட்டின் 'பாழ் நிலம்' கவிதையின் நேரடித் தாக்கம் தெரிகிற 'நகரம்' என்ற சி.மணியின் கவிதையில் கூட மரபார்ந்த சொற்றொடர்களும் உவமைகளும் பயின்றிருந்தன. அவருடைய சமகாலக் கவிஞர்களான சுந்தர ராமசாமி, எஸ்.வைதீஸ்வரன் போன்றவர்கள் கவிதைக்குப் புதிய மொழியைக் கையாண்டபோது மரபை அங்கதத்துக்கு உட்படுத்தும் மொழியைப் பயன்படுத்தினார் சி.மணி.'காதடைக்கும் இரைச்சலுடன் டவுன்பஸ்கள் வரும் போகும்' என்று சமகாலத்திய மொழியில் தொடங்கும் கவிதை அதன் நீட்சியில் 'சூடகத் தளிர்க்கை மாதரொடு சிகரெட் பிடிகை மாந்தரும்' என்று நிறம் மாறும். இந்த வரி புதுசா? பழசா? என்று இப்போதும் யோசிக்கத் தோன்றுகிறது. இந்த மரபுத் திரிபு சி.மணியின் கவிதைகளுக்கு ஓர் அங்கதத் தொனியைக் கொடுத்தது.தமிழ்ப் புதுக் கவிதையில் அங்கதத்துக்கும் இடமுண்டு என்று காட்டியவர் அவராக இருக்கலாம்.
சி.மணியின் கவிதைகளை வெவ்வேறு கட்டங்களில் வாசித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவை ஒவ்வொரு விதமாகப் பொருள்பட்டிருக்கின்றன. சில சமயம் அவை காலத்தால் பழசாகி விட்டவையாகத் தோன்றியிருக்கின்றன. சில சமயம் சமகாலத்துக்குப் பொருந்தக் கூடியவையாகத் தென்பட்டிருக்கின்றன. மணியின் கவிதைகள் பற்றிய கட்டுரையில் சுந்தர ராமசாமி ஒரு படிமத்தை
முன்வைத்திருப்பார். சி.மணியின் கவிதைகள் தரும் மனவுணவர்வு ஏதோ கோவில் பிரகாரத்தில் காலத்தின் களிம்பும் பிசுக்கும் படிய நிற்கும் சிற்பங்கள் ஏற்படுத்தும் பழமையான உணர்வைத் தருகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். சி.மணியின் கவிதைகளை எப்போது படிக்க நேர்ந்தாலும் இந்தப் படிமம் குறுக்கிடுவதைத் தடுக்க முடிந்ததில்லை.மணியின் கவிதை மொழிதான் அதற்குக் காரணம் என்று இப்போது இனங்காண முடிகிறது. கவிதையின் மொழிதான் விரைவான மாற்றங்களுக்கு ஆட்படுகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது அதன் போக்கிலும் கூறுமுறையிலும் மாற்றம் நிகழ்கிறது.புதிய கவிதையியல் பழைய கவிதை மொழியை பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. சி.மணி இன்று வாசிக்கப்படும் கவிஞராக இல்லாமல் முன்னோடியாக மட்டும் கருதப் படுவது இதனால்தான்.இவ்வளவுக்கும் அவர் அன்று கையாண்ட கவிதைப் பொருள்கள் பலவும் இன்றும் பொருத்தப்பாடு உடையவை.
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த.
சி.மணியின் 'மனக்கணக்கு' என்ற இந்தக் கவிதையில் பொதிந்திருக்கும் அங்கதம் இன்றும் பொருத்தமானது. ஆனால் கவிதை தரக் கூடிய புத்துணர்வுக்குப் பதிலாக பழைய சோர்வையும்
வடிவரீதியிலான சமத்காரத்தையும் மட்டுமே இன்று பெற முடிகிறது.
புதுக் கவிதையில் சர்ரியலிசக் கூறுகளைக் கொண்ட கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்த ஞானக்கூத்தன் அவருக்கு அழுத்தமான வடிவத்தையும் பொருளையும்
கூட்டினார் என்று கருதலாம்.
திண்னை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
களவுபோகாமல் கையருகே வை
என்ற ஞானக்கூத்தனின் கவிதையுடன் சி.மணியின் 'தீர்வு' கவிதையை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமான இலக்கிய விளையாட்டாக இருக்கும்.
என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன் என்ன செய்வதென்றால்
என்றான் பெரியசாமி.கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னையில்லை;
மற்ற நேரம் நடக்கும்போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காத
உறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.
கையக் காலாக்கென்றான்.
இரண்டிலும் உள்ள அங்கதமும் சர்ரியலிசக் கூறுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டு வெவ்வேறு கவிதைகள்தாம் எனினும் புதிய ஒரு கவிதைமொழியின் தொடக்கத்தைக் குறிப்பவை.
இந்தப் பரிசோதனைக் கட்டத்தை அல்லது அறிமுகக் கட்டத்தைத் தாண்டிய கவிதைகளை சி.மணியிடம் பின்னர் காணமுடியவில்லை.ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை கவிதைக்கான
எந்த எழுச்சியையும் கொள்ளாமலிருந்தது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.
என்னை பாதித்து சொந்தக் கவிதையை எழுதத் தூண்டிய சி.மணி கவிதை ஒன்றிருக்கிறது.'சுவர்கள்' என்ற அந்தக் கவிதையை 'பூமியை வாசிக்கும் சிறுமி' தொகுப்பில் வாசிக்கலாம். இங்கே
மணியின் கவிதை. 'அறைவெளி'
தப்பிவிட்டேன் என்று விழித்தேன்
சுற்றும் முற்றும் பார்த்தேன் மேலே
வானம்;
நான்கு பக்கமும் கூரிருள்.
கூரை சுவர்கள் எதுவுமில்லை
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.
வெட்டவெளிதான் இது அரையல்ல
என்று சில கணம் துள்ளியது என் மனம்.
மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
எம்பிக் குதித்தேன் இடித்தது கூரை.

@

சி.மணி என்ற பெயரில் 'எழுத்து' சிற்றேட்டின் மூலம் புதுக்கவிதையின் சோதனையாளராக அறிமுகமானவர் ஆங்கிலப் பேராசிரியர் பழனிச்சாமி.'வரும்போகும்', 'ஒளிச்சேர்க்கை'  'இதுவரை'ஆகியவை அவருடைய கவிதைத் தொகுப்புகள்.இவை தவிர மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். மைதிலி மொழிக் கவிஞரான உதய் நாராயண் சிங்கின் கவிதைகளின் மொழியாக்கம் அண்மையில் வெளியாகியிருக்கிறது.இலக்கியம் தவிர பிற துறைகள் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். கடந்த ஆறாம் தேதி சி.மணி காலமானார்.
@
அமரர் டாக்டர்.அய்யப்ப பணிக்கர் மலையாளக் கவிதையில் சில சோதனைகளைச் செய்தவர். ஒற்றை வார்த்தையை வெட்டி எழுதுவது, சொற்க¨ளை அபத்தமான தொனி வரும்படி பிரித்துப் போடுவது, கார்ட்டூன்தன்மையுள்ள வரிகளை உருவாக்குவது என்று விளையாடிப் பார்த்தவர். ஒருமுறை கவிதை பற்றிய விவாதத்தில் கேட்டார்.' தமிழில் ஒரு கவிஞர் இலக்கியத்துக்கு விளக்கம் சொல்வதுபோல ஒரு கவிதை எழுதியிருப்பாரே? ஒரு இங்கிலீஷ் வாத்தியார்.அந்தக் கவிதை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?'
'இருக்கிறது. இலக்கியம் என்றால் என்னவென்றேன்?/புலவர் ஒருவர் இதுகூடத் தெரியாதா/ இலக்கு + இயம்தான் என்றார்.' இந்த மூன்று வரிதான் கவிதை'
'இந்தக் கவிதைக்குள் என்னமோ இருக்கிறது இல்லையா?' என்றார் பணிக்கர் சார்.
அதில் வார்த்தைச் சாதுரியம் தவிர வேறு இல்லை என்ற எண்ணம் எனக்கு. அதில் என்னதான் இருக்கு என்று அப்போதே கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.அய்யப்பப் பணிக்கர் மறைந்துவிட்டார். சி.மணியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவரைக் கேட்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டேன்.சி.மணியும் மறைந்து விட்டார். அந்தக் கவிதைக்குள் ஒன்றுமில்லை என்றாலும் ஞாபகத்தில் உறைந்து விட்டது.