Saturday, 3 September 2016
கலாப்ரியா
Nellai pasanga
01:15
கலாப்ரியா, 1950இல் திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரம்.
தொடக்கத்தில் தி. மு. க. ஈடுபாடு மிக்கவராக இருந்தவர். பின்னர் இலக்கியம்
படித்து, எழுத்துத் துறைக்கு வந்தபின் எந்தச்
சார்பும் இல்லாதவரானார். தாம் மேற்கொள்ளும் எந்தப் பணியிலும், உணர்ந்த எவ்வகை உணர்விலும் தீவிரமாக எல்லை காணும் இயல்புடைய கலாப்ரியா
இவ்வியல்பு காரணமாகவே தம் கவிதைகள் தீவிரத் தன்மை கொண்டுள்ளன என்கிறார்.
இளம்பருவத்தில் தம் வீட்டுச் சமையல்காரப் பாட்டிகளிடம் கேட்ட பழங்கதைகள் தம்
எழுத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிடுகிறார். எழுத்திற்கு வரும்போது
புதுமைப்பித்தனின் பார்வையைப் பெற்றுத் தம் அனுபவப் பாதிப்பைக் கொண்டு எழுதத்
தொடங்கியதாகவும் கூறுகிறார். ஆறு தொகுதிகளாக வெளிவந்த அவரது கவிதைகள் ‘கலாப்ரியா கவிதைகள்‘ என
மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
|
கலாப்ரியா கவிதையின் இயல்புகள்
|
எழுத்தாளரும் திறனாய்வாளருமான ஜெயமோகன் தம் ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும்
நூலில் உள்ள ‘காட்சியும் கலகமும் - கலாப்ரியாவின் கவியுலகு’
என்ற கட்டுரையில் கலாப்ரியாவின் கவிதை இயல்புகளை ஆழ்ந்த
பார்வையுடன் வெளிப்படுத்தியுள்ளார். கலாப்ரியாவின் கவிதைகள் இன்றைய நவீனக்
கவிதையின் பொது இயல்புகளாகிய குறிப்புத்தன்மை, அதீதத்தன்மை,
அகவயத்தன்மை ஆகிய பொது இயல்புகளிலிருந்து மாறுபட்ட ஒரு புறனடையாக,
கலகக் குரலாக அமைந்தவை. காட்சித்தன்மையும், உலகியல்
தன்மையும், புறவயத்தன்மையும் படிமங்களின்றி, அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகளிலும் நேர்க்காட்சிகளிலும் காட்டப்படுவது
கலாப்ரியா கவிதைகளின் தனி இயல்பு. ஞானக்கூத்தனின் நேரடியான சித்திரிப்புத் தன்மை
தமக்கு ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக அமைந்ததாகக் கலாப்ரியா
குறிப்பிட்டிருக்கிறார். பழைமை, கற்பனைவாதம், இலட்சியவாதம் ஆகியவற்றுக்கு எதிரான, விமரிசன அழுத்தத்தோடு கூடிய
காட்சிச் சித்திரிப்புகளை அவர் கவிதைகளில் காணலாம். காட்சிகள் குறியீடுகளாக மாறி இன்றைய
வாழ்க்கைச் சூழலின் அவலங்களை உக்கிரத்தன்மையுடன் சுட்டிக் காட்டுகின்றன.
|
வாசலோரம்
வந்து நிற்கும் வசந்தத்தை
|
வரவேற்கிறது
|
நேற்றைய
கடைசிப் பனியில் செத்துப்போன சொறிநாய்
|
உலகம்
காணும் சாலையோரக் குழந்தையை
|
ஒரு பஸ்
|
தரையோடு
நசுக்கிவிட்டுப் போகும் இன்று
|
என்பன போல மூர்க்கமும்
அதிர்ச்சியும் கொண்ட வெளியீடுகள் அவர் கவிதைகள். (ஜெயமோகன், உள்ளுணர்வின் தடத்தில், பக்.91-128)
இனிக் கலாப்ரியாவின் பாடப்பகுதிக் கவிதைகளைக் காண்போம்.
|
எம்பாவாய்
|
‘ஏலோர் எம்பாவாய்’ என முடியும்
ஆண்டாளின் ‘திருப்பாவை’, மாணிக்கவாசகரின்
‘திருவெம்பாவை’ப் பாடல்களை நீங்கள்
படித்திருக்கலாம்; இசையரங்குகளில் கேட்டுமிருக்கலாம்.
மார்கழி அல்லது தை மாதத்தில் இளம் பெண்கள் பாவை நோன்பு நோற்று விடிகாலையில்
ஒருவரையொருவர் எழுப்பிக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறைவழிபாடு
செய்யும் பழந்தமிழ் மரபு அந்த இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளது. கலாப்ரியாவின்
கவிதை ‘எம்பாவாய்’ என்பதைத்
தலைப்பாகக் கொண்டு இன்றைய சேரிப் பெண்களின் விடிகாலைச் சிரமங்களைக் காட்சியாகக்
காட்டுவதன் மூலம் சுருக்கெனத் தைக்கும் கூர்மையான சமூக விமரிசனத்தை
வெளிப்படுத்துகிறது. கவிதைப் பொருளை முதலில் காண்போம்.
|
நகரோரத்துக்
|
குடிசைப்
பெண்கள்
|
ஆண்டாளின்
|
வம்சங்கள்
|
சொறி
உதிர்க்கும்
|
கறுப்பு
நாயைத்
|
துணைக்
கழைத்து
|
ஊரை
விட்டு
|
வெளியே
|
கக்கூஸ்
தேடிப்
|
போவார்
|
கருக்கலில்.
|
இது கவிதையின் கடைசிப் பகுதி. இவ்வாறு செல்லும் சேரிப் பெண்களின்
நினைவும் பேச்சும் அக்கறைகளும் எவற்றைப் பற்றியவை? கவிதையின் முன்பகுதி அவற்றைத் தெரிவிக்கிறது.
|
‘நேற்று மாலைவரை
இருந்த உடைமரப் புதர்களை யாரும் வெட்டியிருக்கக் கூடாது’ என
வேண்டிக் கொள்கிறார்கள்.
|
‘நீர் குறைந்து கெடத்
தொடங்கும் கால்வாயில் புதுநீர் வரும்’ எனக் கனவு
கண்டுகொண்டே போகிறார்கள்.
|
‘காவல் வருகிற
கறுப்பு நாயை, பொதி சுமந்து, மேய்வதை
விட்டு ஒதுங்கி ஊரோரத்தில் நிற்கும் கழுதைகளோடு விளையாடப் போக விடக்கூடாது’
என நினைத்துக் கொள்கிறார்கள்.
|
‘இப்போதுதான்
உதயமாகவிருக்கிற ஆரஞ்சுநிறச் சூரியன், அவர்களின் ‘பாதி அம்மணத்தைப் பார்த்துவிடக் கூடாதே’ என்று கவலைப்பட்டு
விரைவாகப் போகிறார்கள். அதே நேரம் ‘பாதையை முழு இருளால்
வழிமறைத்து விடவும் கூடாது’ என நினைத்துக் கொள்கிறார்கள்.
|
இவ்வளவு கவலைகளுக்கும் கவனங்களுக்கும் இடையில்,
|
கொஞ்சம்
சிரித்துப்
|
பேசினபடி
|
போகிறார்கள். கவிதையின் இறுதியில்
கவிஞர் ஒரு குறிப்புத் தருகிறார்.
|
ஸ்ரீமத்
. . . . . . . . அருளிச் செய்த
|
திருவெம்
பாவை
|
இனி இக்கவிதையின் சமூக விமரிசனம், வாசக விளைவு பற்றிப் பார்ப்போம். இரா. மீனாட்சியின் ‘தெருப்பாவை’ என்ற கவிதை திருப்பாவையை நினைவு
படுத்தினாலும் பெயரளவோடு நின்று விடுகிறது. திருப்பாவையைத் தொடர்புபடுத்தவில்லை.
கலாப்ரியாவின் கவிதை பழைய பாவைப் பாடலிலிருக்கும் உணர்வுக்கும் உண்மைக்கும்
எதிரான தலைகீழ்ச் சமூகச் சரிவை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. இந்தக்
காட்சியில் திருப்பாவை, திருவெம்பாவைப் பெண்களுடன் இன்றைய
சேரிப்பெண்களின் ஒப்பீட்டை நாமே கற்பனையில் காணமுடியும். பாவைப்பாடல்களைப் படித்திருப்போர்
தெளிவாகக் காணமுடியும். ‘பாவை’ப் பெண்களின் விடிகாலை, மகிழ்ச்சியும் இனிமையும் ஆடலும்
பாடலும் விளையாட்டும் மனக்கிளர்ச்சியும் மிக்கது. கண்ணன் பெருமை, அவதார மகிமை, நோன்பின் மேன்மை அவர்கள் எதிரே
குலுங்கும் இயற்கையின் அழகுகள் ஆகியவை அவர்களின் பேச்சிலும் நினைவிலும்
நிறைந்திருப்பவை. நோன்பின் முடிவில் அவர்கள் கண்ணனிடம் வேண்டும் பறையும், அணிய விரும்பும் நகைகளும், உண்ண
விரும்பும் விருந்தும் அவர்களின் உலகத்தை நம்முன் விரித்துக் காட்டுவன. கலாப்ரியா காட்டும் ‘ஆண்டாளின் வம்சங்க’ளின்
விடிகாலைப் பொழுது, ‘நோன்பு நீராடலை அன்று, காலைக்கடனைக் கவலை மிக்கதாகக்
காண்பது. சேரிப்பெண்கள் அல்லவா, ஆகவே இவர்கள்
கடவுளைப் பற்றியும் கடவுள் இவர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்பது
குறிப்பு. இவர்கள் பாடிச் செல்வதில்லை. பதற்றமான நினைவுகளுடனும் சிறுசிறு
பேச்சுகளுடனும் போகிறார்கள். இவர்களுக்குக் கண்ணன் - சிவன் அருள், நல்ல கணவன்மார் எனும் நோக்கங்கள் இல்லை. மறைவு
தரும் உடைமரப் புதர்களும், கால்வாயில் கொஞ்சம் நீரும்தான்
தேவை. கதிரவன் உதயமாகியிருக்கக் கூடாது; பாதை தெரியாத
இருளாகவும் இருக்கக் கூடாது; சொறிநாயின் காவலை மீறி ஏதும்
நிகழ்ந்துவிடக் கூடாது என்பவை இவர்களின் பதற்றங்கள். பாவைப் பெண்களின் மழை
வேண்டும் பாடல்களையும், இவர்களின் ‘வற்றும்
கால்வாயில் கொஞ்சம் புதுநீர்’க் கோரிக்கையையும் வேதனையுடன்
நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
|
நமது காலச் சூழலில் ஏழைச் சேரிப்பெண்களுக்கு இது சாதாரண அன்றாட
நிகழ்ச்சிதான். ஆனால் பாவைப் பெண்களுடன் இவர்களை நிறுத்தி ஒப்பிட்டுப்
பார்க்கும் பார்வையில் இந்நிகழ்ச்சி அதிர்ச்சியான பரிமாணங்கள் கொள்கிறது; நம் மனச்சான்றை உலுக்குகிறது. சொறி உதிர்க்கும் கறுப்புநாய், ஊரோரக் கழுதைகள்,
கெடத்துவங்கும் கால்வாய், பாதி அம்மணம்
போன்ற சொற்களும் தொடர்களும் பாவைப் பெண்கள் கண்ட இயற்கை அழகுகளைச்
சித்திரிக்கும் மேலான கவித்துவச் சொற்களுடன் எதிரெதிர் நிறுத்திப்
பார்க்கப்படும் போது நிகழ்கால வாழ்வின் அருவருப்பான கீழ்மை நன்றாகப் புலப்படும்.
|
ஆண்டாள் பற்றிய குறிப்பும், கவிதை இறுதியில்
கவிஞர் தரும் ‘அருளிச் செய்த திருவெம்பாவை’ என்ற குறிப்பும் ஒன்றவில்லை. ஆண்டாள் பாடியது திருப்பாவை. திருவெம்பாவை
மாணிக்கவாசகர் பாடியது. இரண்டு பாவைகளையும் இணைத்திருக்கிறார் கவிஞர். சைவம்
வைணவம் என்பவற்றை இணைத்துச் ‘சேரிப் பெண்ணியம்’ என்பதன் முன் நிறுத்திப் பார்க்க விழைந்திருக்கிறார் கவிஞர்
|